Friday, 25 August 2017

எம்.பி.பி.எஸ். பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: தர வரிசையில் முதல் 26 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பங்கேற்கவில்லை


எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களைப் பெற்ற மாணவர்கள் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் சிறப்புப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் உள்ள 131 இடங்களில் 14 இடங்கள் மட்டுமே நிரம்பின. 
பொதுப்பிரிவு கலந்தாய்வு:பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது. கலந்தாய்வுக்கு 1,209 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சேர்க்கைக் கடிதத்தை வழங்கினார்.
26 பேர் பங்கேற்கவில்லை:மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களைப் பெற்ற மாணவர்கள் யாரும் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 
இவர்கள் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலந்தாய்வில் முதலிடம் பெற்ற மாணவர், தர வரிசையில் 27-ஆவது இடத்தில் உள்ளார்.
8 சிபிஎஸ்இ மாணவர்கள்:கலந்தாய்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள், 2 பேர் மட்டுமே மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள். ஏ. ஆஷ்ஃபஹ் சுலைமான், ஏ.சம்யுக்தா, ஆருஷி அகர்வால், எம்.ஆதித்யா , காத்யாயனி கோஸ்வாமி, எம்.ஜான் நிர்மல், எம்.ஸ்வேதா, எஸ்.நித்திலா, சி.அரவிந்த், எம்.அழகப்பன் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
928 இடங்கள் நிறைவு: மாலை வரை நடைபெற்ற கலந்தாய்வில் 928 இடங்கள் நிரம்பின. செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதால் இரவு வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. முதல்நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தவிர்க்காமல் இடங்களைத் தேர்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களில் கணிசமானோர் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடித்துவிட்டு, நீட் தேர்வுக்கு திட்டமிட்டுத் தயாராகி அதன் அடிப்படையில் இப்போது இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பாதுகாப்பு: நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் நுழைவோர் தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
சனிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசை 1,210 முதல் 2,673 வரை, நீட் மதிப்பெண் 367 முதல் 296 வரை பெற்ற 1,464 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...