சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இதுவரை 250 பேர், குறிப்பாக குழந்தைகள் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தஞ்சாவூரில்தான் அதிகமானோர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் டெங்கு உற்பத்தி லார்வாக்கள் பெருமளவில் குறைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிக்குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என பொது சுகாதார துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் கழிவுநீர் அகற்றுவது போன்ற பணிகளை முடக்கிவிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் கொசு எதிர்ப்பு வாரமாக அறிவிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் உள்ள பெண்களிடம் கொசு ஒழிப்பு தொடர்பான பிரசாரங்கள் நடத்தப்படவுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கொசு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் சுகாராதப் பணியாளர்கள் இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை ஏற்கனவே தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு நல்ல பலனை அளித்துள்ளது.
டெங்கு கொசுக்கள் பிரச்னையுடன், இப்போது புதிதாக போலி மருத்துவர்கள் பிரச்னையும் எழுந்துள்ளது. தவறான மருந்துகளை இவர்கள் கொடுப்பதாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் 100 போலி மருத்துவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது சரியான மருத்துவமனைகளுக்கோ உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment