Thursday, 28 September 2017

அரசு விழாக்களில் மாணவர்கள் படும் இன்னல்கள் தெரிவதில்லையா?- உங்கள் பெருமைகளை பேசுவது தான் உங்கள் நோக்கமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை அரசு விழாக்களில் மாணவர்களை அழைத்து சென்று பல மணி நேரம் காக்கவைத்து உங்கள் பெருமையை பேசுவதுதான் உங்கள் நோக்கமா? மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? சிபிஎஸ்இ மாணவர்களை ஏன் அழைத்துச்செல்வதில்லை. அவர்கள் எம்ஜிஆர் பற்றி தெரிந்துக்கொள்ளக்கூடாதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற அமர்வு அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசனையுடன் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 30ஆம் தேதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் சேலம் நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடைவிதித்தும், வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழக பள்ளிகல்வித்துறை, தடையை நீக்க வேண்டும் என அவசர கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று வழக்கை நீதிபதிகள் மீண்டும் இன்று விசாரித்தனர்.
*அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதம்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை தகுந்த பாதுகாப்புடன், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே அழைத்து செல்கிறோம். அரசியலை தாண்டிய அரசு நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆலோசனைகள், சொற்பொழிவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதால், மாணவர்கள் தாங்களாகவே ஆர்வமாக கலந்துகொள்வதுடன், யாரும் வற்புறுத்தி அழைத்து செல்லப்படவில்லை.
9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களே மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெறுகின்றனர். மாணவர்கள் ஏதும் துன்பப்படுவதில்லை.
நீதிபதிகள்: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 27ன்படி தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரிடர் அவசரகால பணியை போன்றவை தவிர ஆசிரியர்களை வேறெந்த பணிக்கும் அழைத்து செல்லக்கூடாது என சொல்லியுள்ளது. அதை மீறும் வகையில் உள்ளது போலதான் உள்ளது. ஆசிரியர்களே கூடாது என்றால் அவர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் எப்படி அழைத்து செல்ல முடியும்? தடைவிதித்த ஒரு சில மணி நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வைத்தலிருந்தே இந்த நிகழ்ச்சிக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது தெரியவருகிறது.
மாலை நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான பேச்சுகள் எதுவும் இல்லை. அரசின் பெருமையை பேசுவது தான் உங்கள் நோக்கமாக இருக்கிறது மாணவர்கள் படும் இன்னல்கள் உங்களுக்கு தெரிவதில்லை. பெருமைகளை காட்டிக்கொள்வதுதான் உங்களுக்கு முக்கியம். பிரிட்டன் ராணியும், பிரதமரும் வந்தால் கூட மாணவர்களை அழைத்து செல்ல அதிகாரம் இல்லை.
தொடர்ந்து 2 மணி நேர நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கும்போது அவர்களின் மனநிலை ஒரே நிலைப்பாட்டிலா இருக்கும்? உங்களால் உட்கார்ந்து கவனிக்க முடியுமா? விவேகானந்தரே தற்போது வந்து உரையாற்றினால் கூட 100 பேருக்கு மேல் தொடர்ந்து கவனிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எம்.ஜி.ஆர் பற்றி தெரிந்து கொள்ள சி.பி.எஸ் மாணவர்களை அழைத்து செல்லவதில்லையா? ஏன் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லையா? பாடதிட்டத்தை ஒப்பிடும்போது சி.பி.எஸ்.சி-யைவிட மாநில பாடதிட்டம் தரம் குறைவாக உள்ளது.
ஆனால் ஆசிரியரின் ஊதியம் மட்டும் அதிகமாக பெறுகின்றனர். தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை இதே அமைப்பை கொண்டு சனிக்கிழமை தோறும் அந்தந்த பள்ளிகளில் மின்னனு முறையில் நடத்தலாமே? மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவது பெற்றோர்களுக்கு தெரிவிக்கபடுகிறாதா? கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. புத்தகம், லேப்டாப், சீருடை வழங்கி கூட கொண்டாடலாமே. மாவட்ட தலைநகரான சேலத்திற்கு வருவதற்கு, அந்த மாவட்டத்தில் உள்ளவர்களே 130 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது, சிலர் மலைப் பிரதேசங்களிலிருந்து வர வேண்டியுள்ளது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்: மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. மாணவர்களை அழைத்து செல்ல கட்டுப்பாட்டு விதிகளை வேண்டுமானல் நீதிமன்றம் உருவாக்கி, பார்வையாளர் ஒருவரை நியமியுங்கள், ஆனால் தற்போதைய தடையை நீக்க வேண்டும்.
நீதிபதிகள்: புதிய பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு இன்னும் 50 ஆண்டுகள் கூட ஆகலாம். விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை மீது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? என்ன செய்கிறது மாநில ஆணையம்? ஏதும் சம்பவம் நடந்தால்தான் செயல்படுமா? பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை; உங்களின் புத்தாக்க நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் நடத்துவதற்கு பதிலாக வாரந்தோறும் அந்தந்த பள்ளிகளில் நடத்தலாம் என்பதுதான்.
மனுதாரர் மாற்றம் இந்தியா இயக்குனர்.நாராயணன் : ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களின் மன அழுத்தும், தவறான முடிவெடுக்காமல் தடுப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
ஆனால் இங்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அரசியல் தலைவர்களின் பேனர்கள் மட்டுமே ராட்சத அளவில் வைக்கப்படுகின்றன .இது மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்த சூழ்நிலை தான் ஏற்படுத்தும் அதுமட்டுமல்லாமல், காலை முதலே முறையான ஏற்பாடுகள் இன்றி நிகழ்ச்சிக்காக காத்திருக்க வைக்கப்படுகின்றனர்.
(ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் ஆவணங்கள், நிழற்படங்கள், வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டதையும் விசாரணையிண் இடையே நீதிபதிகள் ஆய்வு செய்தனர்)
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் ஆகியோர், மாணைவர்களை அழைத்து செல்ல விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்ற அரசின் தள்ளுபடி செய்தனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை உறுதிசெய்தனர்.
நேற்று விதித்த தடையை உறுதிசெய்து உத்தரவிட்டனர். பரிசு பெறக்கூடிய மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் எனவும் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் அமர்வு உத்தரவிட்டது

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...