நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற அனல் நெஞ்சை சுட்டதில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் அனிதா, ஆனால் உயிரை விடுவது மட்டுமே எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
கழுத்தில் ஸ்டதெஸ்கோப், மேலே வெள்ளை கோட் இந்த உடையை அணியத் தான் எத்தனை எத்தனை ஆசை. தன்னுடைய சின்னஞ்சிறு மனதில் பெரிய கோட்டை கட்டி வைத்திருந்த அனிதாவின் கனவு உச்சநீதிமன்றத்தின் ஒரே தீர்ப்பால் சரிந்தது. இதனால் விரக்தியடைந்த அனிதா மிகுந்த மனஉளைச்சலிலேயே இருந்துள்ளார். இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் அனிதா.
ஏழ்மை என்றாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், படிப்பில் ஜொலித்தவர் அனிதா. சென்னை உயர்நீதிமன்றம் கைவிட்டாலும் உச்சநீதிமன்றம் கைவிடாது என்று தைரியமாக இருந்த அனிதா, இப்படி ஒரு முடிவை எடுத்தது அனைவருக்குமே பெரும் வலியைக் கொடுத்துள்ளது.
போராட வேண்டும்
மாணவர்களுக்கு பல்வேறு கனவுகள் இருந்தாலும் அது கிடைக்காவிட்டால் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும். போராட்ட குணம் என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பதை இளைய சமூகத்தினர் உணர வேண்டும்.
வீழ்ந்தாலும் எழுவதே நம்பிக்கை
மாவீரன் நெப்போலியன் 18 முறை போரில் தோற்றான் என்பது வரலாறு, ஆனால் இதில் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் 18 முறை வீழ்ந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தது மாவீரனிடம். இது தான் இன்று மாணவர்களுக்குத் தேவை.
அடுத்த வாய்ப்பிற்காக தயார்படுத்துங்கள்
மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் பலரால் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நீட் தேர்வில் மேலும் 2 முறை தேர்வு எழுதலாம் என்பதை புரிந்து கொண்ட மாணவர்கள் அதனை தங்களது இலக்காக நிர்ணயித்துக் கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.
பின்வாங்கக் கூடாது
தோல்வி என்பது எப்போதுமே கிடையாது, தன்னம்பிக்கையை இழக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும் சமூகத்தில். உன்னுடைய கனவை அடைய வேண்டும் என்றால் நீ அதற்காகவே உன்னை அர்ப்பணிக்க வேண்டுமே தவிர தற்கொலை என்ற முடிவை எடுத்து பாதியிலேயே பின்வாங்கக் கூடாது என்பதே கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்களின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது
No comments:
Post a Comment